5½ லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

குமரி மாவட்டத்தில் 5.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன் வினியோகம் நடைபெற்று வருகிறது.

Update: 2022-01-02 20:29 GMT
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 5.65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதற்கான டோக்கன் வினியோகம் நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 
அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
அதே போல குமரி மாவட்டத்திலும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு தேவையான பொருட்கள் ஏற்கனவே குமரி மாவட்டத்துக்கு மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அவற்றை பாக்கெட் போடும் பணி நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு குடோனில் நடந்தது. அது நிறைவடைந்ததை தொடர்ந்து பரிசு தொகுப்புகள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி நேற்று தொடங்கியது.
ரேஷன் கடைகள்
குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் 777 ரேஷன் கடைகள் உள்ளன. எனவே குடோனில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு லாரிகளில் ஏற்றப்பட்டு ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு பையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடந்தது. இந்த பணி இன்று (திங்கட்கிழமை) முடிவடையும் என தெரிகிறது. 
இதற்கிடையே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்று அனைத்து ரே‌ஷன் கடை பணியாளர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அதன்படி ரே‌ஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரே‌ஷன் கடையிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்பட உள்ளது.  
டோக்கன் வினியோகம்
பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு முக கவசம் அணிந்து பொருட்களை வாங்கி செல்லலாம் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இதுபற்றி அவரிடம் கேட்டபோது "குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 65 ஆயிரத்து 401 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வினியோகம் நடைப்பெற்று வருகிறது. டோக்கனில் ரேஷன் கடை எண், பொங்கல் பரிசு தொகுப்பு பெற வரவேண்டிய நாள் மற்றும் நேரம் இடம்பெற்று இருக்கும். எனவே பொதுமக்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ள நேரத்தில் முக கவசம் அணிந்து ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி செல்லலாம்" என்றார்.

மேலும் செய்திகள்