கே.கே.நகர்
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் சி-பிளாக் குடியிருப்பில் வசித்து வருபவர் மயில்வாகனன். இவர் வளர்த்து வந்த 2 ஆடுகளை 31-ந் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் மயில்வாகனன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பணம் தேவைப்பட்டதால், அந்த பகுதியை சேர்ந்த கிளிண்டன் (வயது 23), சந்தோஷ் பிரியன்(20), புகழேந்தி (23), சென்னையை சேர்ந்த அபிவினித் (19), பொன்மலை மிலிட்டரி காலனியை சேர்ந்த மரிய ஜான் போஸ்கோ (21) ஆகியோர் ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதில் புகழேந்தி மீது கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் இருப்பதும், மரிய ஜான் போஸ்கோ மீது பாலக்கரையில் ஒரு வழக்கு இருப்பதும் போலீஸ் விசாராணையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆடுகளை மீட்டனர். பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.