ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த அண்ணனை காப்பாற்றிய தம்பி நீரில் மூழ்கி பலி

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த அண்ணனை காப்பாற்றிய தம்பி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

Update: 2022-01-02 18:33 GMT
ஆம்பூர்

ஆம்பூர் அருகே கிணற்றில் விழுந்த அண்ணனை காப்பாற்றிய தம்பி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

அண்ணனை காப்பாற்றினார்

ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவரது வீட்டின் அருகே மலையடிவாரப் பகுதியில் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் நேற்று முன்தினம் உதயகுமாரின் அண்ணன் செல்வக்குமார் குளிக்கச் சென்றார். நீச்சல் தெரியாத நிலையில் கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். 

அப்போது அந்த வழியாக சென்ற உதயகுமார் கிணற்றில் அண்ணன் தத்தளிப்பதை பார்த்து அவரை காப்பாற்ற முயன்றார். கிணற்றில் இறங்கி அண்ணனை மீட்டு கிணற்றின் படிக்கட்டு அருகே கொண்டு வந்தார். ஆனால் உதயகுமார் திடீரென கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
தண்ணீரில் மூழ்கி தம்பி பலி

இதில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றின் படியில் இருந்த உதயகுமாரின் அண்ணன் செல்வக்குமாரை மீட்டு மேலே கொண்டுவந்தனர். பின்னர் உதயகுமாரை மீட்க முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். 

அவர்கள் கிணற்றில் மூழ்கிய உதயகுமாரை நீண்ட நேரமாகப் போராடி பிணமாக மீட்டனர். பினனர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த உதயகுமாருக்கு சுமதி என்ற மனைவி, 7 மாத ஆண் குழந்தை உள்ளனர்.

மேலும் செய்திகள்