அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

அனுமன் ஜெயந்தி விழா: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2022-01-02 17:53 GMT
நாமக்கல்:
அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் நேற்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 2 டன் பூக்களை கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
1 லட்சத்து 8 வடைகள்
கோவில் நடை திறக்கப்பட்டு நேற்று அதிகாலை 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
 பின்னர் மதியம் 12 மணியளவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் தொடங்கியது. எண்ணெய், தயிர் மற்றும் சந்தனம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு பட்டாச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு குடம், குடமாக பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு ஆஞ்சநேயர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அனுமன் ஜெயந்தி விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கலெக்டர் ஸ்ரேயா சிங், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
இதையொட்டி நாமக்கல்- கோட்டை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதில் நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். கோட்டை சாலையில் ஒரு புறத்தில் உழவர் சந்தை வரையிலும், மற்றொரு புறத்தில் பிரதான சாலை வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந் ததை பார்க்க முடிந்தது.
அவர்கள் துளசி மாலை, வெற்றிலை மாலை கொண்டு வந்து சாமிக்கு சாற்றி வழிபட்டனர். இதையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆன்லைனில் ஒளிபரப்பு
இந்த ஆண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆன்லைன் மற்றும் டோக்கன் முறையில் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து முககவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வலைத்தளம் மற்றும் ஆன்லைனிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு இலவச தரிசனத்திற்கு 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஆனால் இந்த ஆண்டு ஒரு வழி மட்டுமே இருந்தது. இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்