கடலூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடக்கம்
கடலூர் மாவட்டத்தில் 1¼ லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று (திங்கட்கிழமை) முதல் செலுத்தப்படுகிறது.
கடலூர்,
கொரோனா தடுப்பூசி
தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் தமிழக மக்களை கொரோனா 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் 16.1.2021 முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனால் மாவட்டத்தில் நோய் பாதிப்பு மற்றும் நோயினால் உயிர் இழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. தற்போது உலகளவில் மற்றும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒமைக்ரான் வகை உருமாறிய வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
1¼ லட்சம் பேர்
இருப்பினும் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்பதால் தடுப்பூசி போடுவதில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வரு வதால் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 15 முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து நாட்களிலும் 15 - 18 வயது வரை உள்ள 1 லட்சத்து 20 ஆயிரத்து 600 பள்ளி சிறுவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் முகாம் அமைத்து மருத்துவக்குழுவினர் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கோவாக்சின் மட்டும்
இவர்களுக்கு மருத்துவரின் நேரடி மேற்பார்வையில் தடுப்பூசி போடப்படும். மேலும், பள்ளி சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதினால் எவ்வித பக்க விளைவுகளும், பின் விளைவுகளும் ஏற்படாது. அசைவம் உண்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா தொற்றினால் இறந்தவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆவர்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி சிறார்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலுமாக தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.