தமிழகம் முழுவதும் ரூ.1,640 கோடி கோவில் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி
தமிழகம் முழுவதும் ரூ.1,640 கோடி கோவில் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு பேட்டி
நாமக்கல்:
தமிழகம் முழுவதும் ரூ.1,640 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
அமைச்சர் சேகர்பாபு
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஜெயந்தி விழாவையொட்டி 1 லட்சத்து 8 வடை மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
ஆன்மிகத்துக்கு எதிரான அரசு அல்ல
கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும், புத்தாண்டின் போது அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அரசு ஆன்மிகத்துக்கு எதிரான அரசு அல்ல, ஆன்மிகவாதிகளையும் அரவணைத்து செல்லும் அரசு என்பதை இதன் மூலம் நிரூபித்து உள்ளோம். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் கோவில் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
ஆஞ்சநேயர் பிரம்மச்சாரி கடவுள். எனவே கோவில் வளாகத்தில் உள்ள தங்குமிடத்தில் பணியாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பணியாளர்களுக்காக கோவில் அருகில் 500 மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்படும். ஆஞ்சநேயர் கோவில் அருகில் பக்தர்கள் தங்குமிடம் ஏற்படுத்த முதல்-அமைச்சரின் பரிசீலனைக்கு எடுத்து செல்லப்படும்.
ரூ.1,640 கோடி நிலம் மீட்பு
திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோவில்களில் நீதிபதிகள் முன்னிலையில் தங்கத்தை பிரிக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. கோர்ட்டு அனுமதி பெற்று, கோவில் அறங்காவலர்கள் குழு மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலைக்கு எடுத்து சென்று தங்கம் உருக்கப்பட்டு, டெபாசிட்டில் வைக்கப்படும். அந்த நிதி சம்பந்தப்பட்ட கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் போன்ற பரம்பரை அறங்காவலர்கள் உள்ள கோவில்களுக்கான தங்கத்தை உருக்குவதற்கு அனுமதி கேட்டு அவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அந்த பணியும் மேற்கொள்ளப்படும். திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு ரோப் கார் வசதி செய்ய ஆய்வு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் ரூ.1,640 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் 437 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. இறை சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில், ஆக்கிரமிப்பில் வைத்துள்ளவர்கள் அவர்களாகவே முன்வந்து நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும்.
எதிர்ப்பு குரல்
அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி, வேத பாராயண பள்ளி போன்றவை தொடங்கப்படும். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மத்திய அரசின் எந்த திட்டமாக இருந்தாலும், தமிழகத்தில் இருந்து செலுத்தப்படும் வரியின் அடிப்படையில் நமக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஆதரவு கொடுப்பார், தேவையில்லாத திட்டங்களுக்கு துணிந்து எதிர்ப்பு குரல் கொடுப்பார். இது ஆன்மிக பூமி என்றும், திராவிட நாடு என்பதையும் கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் திறம்பட செயல்பட்டு வருகிறார்.
தமிழக பா.ஜனதா. தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு உதவிட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் நலத்திட்டங்களுக்கு, பா.ஜனதாவினர் தான் கோர்ட்டிற்கு சென்று தடை பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.