கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதி
ராமேசுவரத்தில் 2-வது நாளாக கன மழை பெய்தது. இதில் கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் 2-வது நாளாக கன மழை பெய்தது. இதில் கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
மழை
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ராமேசுவரம் பகுதியிலும் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. இந்தநிலையில் ராமேசுவரம் பகுதியில் 2-வது நாளாக நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரையிலும் இடைவிடாமல் மழை பெய்தது. இரவு முதல் காலை வரையிலும் பெய்த பலத்த மழையால் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் மழை நீர் புகுந்தது.
குறிப்பாக கோவிலில் சாமி சன்னதி பிரகாரத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. பிரகாரத்தில் தேங்கி நின்ற மழைநீரில் நின்றபடி பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். இதேபோல் அம்மன் சன்னதி பிரகாரத்தில் மழைநீர் தேங்கி நின்றது. பிரகாரங்களில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் கோவில் இணை ஆணையர் பழனிக்குமார் உத்தரவின்பேரில் பேஷ்கார்கள் முனியசாமி, கமலநாதன் உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
சாலையில் ஓடிய வெள்ளம்
கனமழையால் ராமேசுவரம் கோவிலோடு சேர்ந்த உப கோவிலான லெட்சுமண ஈஸ்வரர் கோவில் மற்றும் நாகநாதர் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. அதுபோல் கோவில் முதல் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ராம தீர்த்தம் முதல் சீதா தீர்த்தம் வரையிலும் இடைப்பட்ட சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் அனைத்தும் தத்தளித்தபடி சென்றன.
கோவிலின் கிழக்கு மற்றும் தெற்கு ரதவீதி சாலையிலும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. 2-வது நாளாக ராமேசுவரத்தில் பெய்த தொடர் பலத்த மழையால் நகரின் பல்வேறு தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஆணையாளர் மூர்த்தி தலைமையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மீனவர்களுக்கு தடை
இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் நேற்று பலத்த மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் எச்சரிக்கையை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பாம்பனில் நேற்று விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக கடல் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.