ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் நிரம்பி வழியும் தடுப்பு அணைகள்

பலத்த மழை காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.

Update: 2022-01-02 15:16 GMT
பலத்த மழை

கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த கனமழைக்கு திருவள்ளூர் மாவட்டம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. அதன்பின் மழை ஓய்ந்து பகல் நேரத்தில் கடும் வெயிலும் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திடீரென்று பலத்த மழை கொட்டி தீர்த்தது.

சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் உள்ள ஆரணியார் அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

தண்ணீர் திறப்பு

இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது.

இந்த நிலையில் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு நீர்வரத்து அதிகமாகி அணை முழுவதுமாக நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு ஆரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளி மற்றும் சிட்ரப்பாக்கம் பகுதிகளில் உள்ள தடுப்பு அணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

மேலும் செய்திகள்