சேலம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.6.95 கோடிக்கு மது விற்பனை

சேலம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.6 கோடியே 95 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

Update: 2022-01-01 21:37 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி ஒரே நாளில் ரூ.6 கோடியே 95 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
மதுக்கடைகள்
சேலம் மாவட்டத்தில் 218 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சாதாரண நாட்களில் தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். அதேசமயம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மது விற்பனை இரு மடங்கு உயர்ந்து காணப்படும். இந்த நிலையில், 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மது வகைகளை வாங்க கடைகளில் குவிந்தனர். இதனால் இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது.
ரூ.6.95 கோடிக்கு விற்பனை
அதேசமயம், நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் என்பதால் புத்தாண்டை கொண்டாட இளைஞர்கள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி சென்றனர். ஒருசிலர் தங்களது நண்பர்களுடன் பாரில் அமர்ந்து மது அருந்தி புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடினர்.
இதனால் நேற்று முன்தினம் ஒரேநாளில் 218 டாஸ்மாக் கடைகளில் ரூ.6 கோடியே 95 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றது. சாதாரண நாட்களில் ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் புத்தாண்டையொட்டி கூடுதலாக ரூ.2 கோடிக்கு மது வகைகள் விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு (2021) இதே நாளில் ரூ.7 கோடியே 11 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்