கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவிய தின நிகழ்ச்சி
133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவிய தின நிகழ்ச்சியையொட்டி தமிழ் அமைப்பினர் மலர்தூவி மரியாதை செய்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இ்ந்த சிலை நிறுவப்பட்ட 22-ம் ஆண்டு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ் அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலா தலங்கள், கடற்கரைக்கு செல்ல 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டதால் படகு போக்குவரத்து நடைபெறவில்லை. இதனால் மரத்திலான திருவள்ளுவர் மாதிரி சிலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கிழக்கு பகுதியில் வைத்து தமிழ் அமைப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.