வத்திராயிருப்புக்கு ெபயர் வாங்கிக்கொடுக்கும் காளைகள்
ஜல்லிக்கட்டு களத்தில் வத்திராயிருப்புக்கு ெபயர் வாங்கிக்கொடுக்கிறது காளைகள்.
வத்திராயிருப்பு,
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த ஜல்லிக்கட்டு விழாக்களில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வகை காளைகள் தவறாமல் பங்கேற்கின்றன. பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பதற்காக காளைகளுக்கு சிறப்பு பயிற்சியினை இப்பகுதிகளில் உள்ள இளைஞர்கள் அளித்து வருகின்றனர்.
அதேபோல இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வத்திராயிருப்பு, சேதுநாராயணபுரம், மகாராஜபுரம், கூமாப்பட்டி, நெடுங்குளம், கான்சாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, மண் குத்துதல், நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
மேலும் மாடுகளுக்கு பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், பருத்திக்கொட்டை, புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தினமும் 3 வேளை கொடுத்து வளர்த்து வருகின்றனர். வயல் வெளிகளில் தற்காலிக வாடிவாசல் அமைத்து இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மாடு பிடிக்கும் பயிற்சியும் பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அந்த இளைஞர்கள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதி ஜல்லிக்கட்டு காளைகள் பெயர் பெற்றவை. இங்குள்ள காளைகள் தமிழகத்தில் எந்த பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் அதில் கண்டிப்பாக பங்கேற்று வெற்றி வாகை சூடும். அந்த பெயரினை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் காளைகளுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து, தயார்படுத்தி வருகிறோம்.
தற்போது தமிழக அரசு நாட்டு மாடு மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. இதனால் நாட்டு மாட்டின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும், அழிவிலிருந்து நாட்டு மாடுகளை காப்பாற்றுவதற்கும் ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். நாட்டு மாட்டின் முக்கியத்துவம் அறிந்து அறிவிப்பை வெளியிட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிக்கிறோம்.
ஜல்லிக்கட்டு மாடுகளை வீட்டில் ஒரு குடும்பத்தினராகவே கருதி அதனை எங்கள் பிள்ளை போன்று அதற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வளர்த்து வருகிறோம்.
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாங்கி செல்லும் காளைகள் வாடி வாசலில் கம்பீரமாகவும், திமிருடன் விளையாடுவதால் எங்கள் பகுதி காளைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். இது எங்களுக்கும் எங்கள் பகுதிக்கும் கிைடத்த பெரும் பாக்கியம் என கருதுகிறோம். இதனை தொடர்ந்து தக்க வைக்க முயற்சி செய்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.