ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு இளம்பெண் கைது
நாகர்கோவிலில், ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற இளம்பெண் சிக்கினார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற இளம்பெண் சிக்கினார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மூதாட்டி
குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளை குறிவைத்து நகை பறிப்பு மற்றும் பணம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பஸ்கள் மூலம் கோவில்கள், ஆலயங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்றனர். இதனால் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையத்தில் இருந்து கீழ்குளத்திற்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அதில் மங்கலகுன்று பகுதியை சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி சொர்ணம் (வயது 72) என்பவரும் பயணம் செய்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நகையை பறிக்க முயற்சி
டெரிக் சந்திப்பு பகுதியில் வந்தபோது, சொர்ணத்தின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் நகையை ஒரு இளம்பெண் பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சொர்ணம், நகையை இரு கைகளால் இறுக்கிபிடித்தபடி கூச்சலிட்டார். உடனே இளம்பெண் பஸ்சில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்றார். அப்போது பஸ்சில் இருந்தவர்கள் அவரை தப்பி செல்லாதவாறு சுற்றிவளைத்தனர்.
பின்னர் இதுபற்றி நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட இளம்பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இளம்பெண் கைது
பின்னர் நடத்திய விசாரணையில், கோவில்பட்டியை சேர்ந்த அந்தோணியின் மனைவி பாண்டியம்மாள் (24) என்பதும், மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் போலீஸ் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாகவும் சரியான தகவல்களையும் கொடுக்கவில்லை.
இதனைதொடர்ந்து பாண்டியம்மாளை போலீசார் கைது செய்து, இதுபோன்று இவர் வேறு ஏதேனும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---