இளவட்ட கல்லை தூக்கிய வாலிபர்கள்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இளவட்ட கல்லை வாலிபர்கள் தூக்கினார்கள்.
காரைக்குடி,
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இளவட்ட கல்லை வாலிபர்கள் தூக்கினார்கள்.
விளையாட்டு போட்டி
காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி கத்தோலிக்க இளைஞர் மன்றம் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினமான நேற்று 71-வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான 50 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், முறுக்கு சாப்பிடுதல், பலூன் உடைத்தல் ஆகிய போட்டிகளும், சிறுவர்களுக்கு 200 மீட்டர் ஓட்டம், சாக்கு ஓட்டம், கோல் ஊன்றி ஓட்டம் ஆகிய போட்டிகளும், சிறுமிகளுக்கு 200 மீட்டர் ஓட்டம், நினைவு திறன் போட்டி, ஊசியில் நூல் கோர்த்தல், மெழுகுவர்த்தி ஏந்தி வருதல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றன.
இளவட்ட கல் தூக்குதல்
இதேபோல் வாலிபர்களுக்கு 1000 மீட்டர் ஓட்ட பந்தயம், குண்டு எறிதல், இளவட்ட கல் தூக்குதல், கபடி ஆகிய போட்டிகளும், பெரிய பெண்களுக்கு பாட்டிலில் நீர் நிரப்புதல், அதிர்ஷ்ட கட்டம், கயிறு இழுத்தல் ஆகிய போட்டிகளும், ஆண்களுக்கு சைக்கிள் ஓட்டுதல், கபடி, அதிர்ஷ்ட கட்டம், பானை உடைத்தல் ஆகிய போட்டிகளும் வயது முதிர்ந்தவர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.
இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் வாலிபர்கள் போட்டி போட்டு உற்சாகமாக இளவட்டக்கல்லை தூக்கி போட்டனர். பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க இளைஞர் மன்றம் மற்றும் தளக்காவூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.