திருக்கோவிலூரில் பரபரப்பு டைல்ஸ் மேஸ்திரிக்கு சரமாரி கத்திக்குத்து
திருக்கோவிலூரில் வேலைக்கு அழைத்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த கொத்தனார் டைல்ஸ்மேஸ்திரியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருக்கோவிலூர்
டைல்ஸ் மேஸ்திரி
திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் சங்கராபுரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பஷீர் ஷேக் மகன் சிராஜ்(வயது 26). இவர் டைல்ஸ் பதிக்கும் மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரும் அதே பகுதி வடக்கு வீதியில் வசிக்கும் கொத்தனார் மேஸ்திரி சுமன்(28) என்பவரும் தொழில் ரீதியாக நண்பர்களாக பழகி வந்தனர். இதனால் வேலைக்கு இருவரும் சேர்ந்தே செல்வது வழக்கம்.
ஆனால் சமீபகாலமாக நண்பர் சுமனை கொத்தனார் வேலைக்கு சிராஜ் அழைத்து செல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுமன் நேற்று முந்தினம் நள்ளிரவு சந்தப்பேட்டை சங்கராபுரம் ரோட்டில் உள்ள தனது வீட்டின் முன்பு நடந்து சென்று கொண்டிருந்த சிராஜை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கத்தினார்.
கொத்தனார் கைது
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒடிவந்தனர். அவர்களை பார்த்ததும் சுமன் தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சிராஜை சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு சுமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலைக்கு அழைத்து செல்லாததால் ஆத்திரம் அடைந்த கொத்தனார் டைல்ஸ் மேஸ்திரியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.