புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

Update: 2022-01-01 16:55 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்களில் சிறப்பு வழிபாடு

கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொடடி அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

 அதனைத்தொடர்ந்து சூலக்கல் மாரியம்மன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புத்தாண்டு என்பதால் அதிகாலை முதலே சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, கேரளா மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். 

இவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
கிணத்துக்கடவு பொன்மலை மீது உள்ள வேலாயுதசாமி கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு வேலாயுத சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலை மீது நடந்துசென்று வேலாயுத சாமியை தரிசனம் செய்து சென்றனர். 

இதேபோல கிணத்துக்கடவு சிவலோகநாதர் உடனமர் சிவலோகநாயகி கோவில், கரிய காளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மாசாணியம்மன் கோவில்

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை விமரிசையாக நடந்தது. மாலை 4 மணிக்கு மீண்டும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது.

புத்தாண்டைமுன்னிட்டு பல்வேறு பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் மாசாணியம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று, அம்மனை சாமி தரிசனம் செய்து சென்றனர். கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆனைமலை போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் பொள்ளாச்சி பகுதியில் சுப்பிரமணியர் சுவாமி கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீ கோதண்டராமர் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவில், 

சுல்தான்பேட்டை குமரன் நகர் குபேர விநாயகர் கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்