கிணத்துக்கடவில் போலீசார் தீவிர வாகன சோதனை

கிணத்துக்கடவில் போலீசார் தீவிர வாகன சோதனை

Update: 2022-01-01 16:54 GMT
கிணத்துக்கடவு

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் கிணத்துக்கடவில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வாகன சோதனை

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தியுள்ளது.

 இந்த நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்படி கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கு அனைத்து கடைகளும் மூட கடைக்காரருக்கு அறிவுரை வழங்கினார். இதனையடுத்து கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

5 பேர் மீது வழக்கு

போலீசாரின் கண்காணிப்பு பணிகளை கோவை போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரகாஷ், சந்திரன் ஆகியோர் தலைமையில் கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

அப்போது மதுபோதையில் வாகனங்களை ஓட்டி வந்த நபர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு வழக்கமாக ரோட்டில் கேக் வெட்டி பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடும் மக்கள் போலீசாரின் கெடுபிடி காரணமாக வீட்டிலேயே கேக் வெட்டி அமைதியாக புத்தாண்டை கொண்டாடினார்கள். சாலையில் முகக்கவசம் அணியாமல் சுற்றியவர்களுக்கு போலீசார் கொரோனா விதிமுறையை  முறையாக பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினர்.

மேலும் செய்திகள்