ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை இழந்த கல்லூரி மாணவி

கோவையில், ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை கல்லூரி மாணவி இழந்ததார். இது பெற்றோருக்கு தெரிந்ததால் ஆண் நண்பருடன் ஓட்டம் பிடித்தார்.

Update: 2022-01-01 16:52 GMT
கோவை

கோவையில், ஆன்லைன் விளையாட்டில் ரூ.1 லட்சம், 3 பவுன் நகையை கல்லூரி மாணவி இழந்ததார். இது பெற்றோருக்கு தெரிந்ததால் ஆண் நண்பருடன் ஓட்டம் பிடித்தார்.

ஆன்லைன் விளையாட்டு

இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. கடந்த காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெளியில் சென்று விளையாடுவதை விரும்பினர். 

ஆனால் இளைய தலைமுறையினர் வீட்டுக்குள்ளேயே செல்போன் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் பணம் கட்டி ஏமாறும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகிறது. அந்த வகையில் கோவையிலும் தற்போது ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

பணம், நகை இழப்பு

கோவையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் காட்டூர் ராம்நகரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்க்கிறார்.

இதற்கிடையில் அந்த இளம்பெண்ணுக்கு ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் வந்தது. இதையடுத்து சோமையம்பாளையத்தை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து, ஆன்லைன் மூலம் விளையாடி வந்தார். இதற்காக ஒவ்வொரு தவணையாக ரூ.1 லட்சம் வரை கட்டினார். மேலும் 3 பவுன் நகையை அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தையும் கட்டி விளையாடியதாக தெரிகிறது. ஆனால் அதில் தோல்வி அடைந்ததால், மொத்த பணத்தையும் இழந்துவிட்டார். 

பெற்றோருக்கு தெரிந்தது

இதற்கிடையில் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை காணாமல் போனது குறித்து அந்த இளம்பெண்ணிடம், பெற்றோர் விசாரித்தனர். அப்போது ஆன்லைன் விளையாட்டில், அவற்றை இளம்பெண் இழந்தது தெரியவந்தது.உடனே சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்து, பணம் மற்றும் நகையை கேட்டனர். அதற்கு அவர், குறிப்பிட்ட நாட்களுக்குள் தந்துவிடுவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இந்த நிலையில் அந்த இளம்பெண் கடந்த 30-ந் தேதி வழக்கம்போல் மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டனர். 

அப்போது அந்த இளம்பெண் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றதாகவும், அதன்பிறகு திரும்பி வரவில்லை என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்