இயற்கை முறையில் விளைந்த புழுக்கள் இல்லாத காலிபிளவர்
ராமநாதபுரம் அருகே மலைப்பகுதிகளில் மட்டும் விளையும் காலிபிளவரை விவசாயி ஒருவர் விளைவித்து அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே மலைப்பகுதிகளில் மட்டும் விளையும் காலிபிளவரை விவசாயி ஒருவர் விளைவித்து அறுவடை செய்து சாதனை படைத்துள்ளார்.
நீர் ஆதாரம்
வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர்ஆதாரம் வைகை தண்ணீரும் வடகிழக்கு பருவமழையும்தான். இவை இரண்டும் ஒன்றாக கிடைப்பதுமில்லை, அவ்வாறு கிடைத் தாலும் கிடைக்கும்போது விவசாயம் அழிந்துவிடுவது வழக்கம். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர நீர்ஆதாரமின்றி நெல்லும், மிளகாயும் விளைய வைப்பதற்குள் விவசாயிகள் சொல்ல முடியாத அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுதான் இன்றளவும் ராமநாதபுரம் மாவட்டத்தின் வாடிக்கையாக இருந்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெல்லும், மிளகாயும் ஓரளவு விளைந்து விவசாயிகளுக்கு கைகொடுக்கும். சில சமயங்களில் 2-ம் போக சாகுபடி கிடைத்து மகிழ்விக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் ராமநாதபுரம் அருகே மலைப்பகுதிகளில் மட்டும் விளையும் காலிபிளவர் விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே உள்ள எட்டிவயல் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் விவசாயி முருகேசன் என்பவர் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன் படுத்தி மலைப்பகுதிகளில் விளையும் காலிபிளவர் போன்ற காய்கறிகளை விளைவித்து அறுவடைசெய்வதோடு விற்பனையும் செய்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:- மலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் உற்பத்தியாகும் காலிபிளவர் சமவெளிப்பகுதியில் பருவமழை மற்றும் பனிகாலத்தில் முறையாக பராமரித்தால் மட்டும் விளையும் தன்மை உடையது. இதனை அறிந்து ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளில் இருந்து நாற்றுகளை வாங்கி வந்து 1½ ஏக்கர் பரப்பளவில் நட்டு வளர்த்தேன்.
இயற்கை உரம்
சுழன்று நீர் பாய்ச்சும் முறையில் காலைமாலை வேளைகளில் முறையான தண்ணீர் பீய்ச்சி அடித்து நீர்மேலாண்மை செய்து ரசாயன உரங்கள் எதுவுமின்றி ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், கணஜீவாமிர்தம், சாணம், கோமியம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி வளர்த்து வருகிறேன். பொதுவாக காலிபிளவரில் ரசாயன உரங்கள் போடுவதால் பூக்கள் பெருத்து மட்டுமே வளரும், ஆனால், புழுக்கள் தாக்குதல் அதிகமாகி நஷ்டம் ஏற்படுத்தி விடும்.
புழுக்கள் இல்லாத காலிபிளவர் காண்பது அரிது. ஆனால், இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் புழுக்கள் இல்லாத அழகிய சராசரி அளவில் பூக்கள் பூத்து வருகிறது. இவ்வாறு கூறினார். இவர் மலைப்பகுதிகளில் விளையும் பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், காரட் போன்ற காய்கறிகளையும் பயிரிட்டு ராமநாதபுரத்தில் மலைப்பகுதி காய்கறிகளா என்று ஆச்சர்யப் படும் வகையில் அறுவடை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.