‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் ெதாடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-01-01 15:49 GMT
புகாருக்கு உடனடி தீர்வு 

செங்கோட்டை பிரானூர் பார்டர் பஞ்சாயத்து குற்றாலம் ரோட்டில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 2 நாட்களாக தண்ணீர் வீணாக சென்றது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு செங்கோட்டையை சேர்ந்த நாணய கணேசன் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதையடுத்து குடிநீர் குழாயில் உடைப்பு சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்துக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

சுகாதார கேடு 

நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் உள்ள சி.எம். தொடக்கப்பள்ளிக்கூடம் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் அங்கு குப்பைகளை அகற்றி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 
- ஜெய்னுல் அபிதீன், நெல்லை டவுன். 

குடிநீர் குழாயில் உடைப்பு 

நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு சங்கரன்கோவில் மெயின் ரோட்டில் பர்சுல்லாஷா தைக்கா தெரு எதிரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
- நிசார்அகமது, ராமையன்பட்டி.

குப்பை தொட்டிகள் தேவை 

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் இருந்து ராஜகோபாலப்பேரி செல்லும் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு நிலவுகிறது. குப்பைகள் கொட்டப்படும் இடத்தின் அருகில் குப்பை தொட்டிகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. ஆகையால் அங்கு புதிதாக குப்பை தொட்டிகள் அமைத்து முறையாக குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- ஜெயக்குமார், ராஜகோபாலப்பேரி. 

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிவகாமி அம்மன் கோவில் தெரு, மகாதேவர் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 2 அடிபம்புகள் பழுதடைந்து காணப்பட்டது. அவற்றை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சித்திரைவேல் ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக தற்போது அடிபம்புகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. அதில் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார். 

தெருநாய்கள் தொல்லை

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு லாஸ்நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலைகளில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்வர்களையும் கடிக்க செல்கின்றன. இதனால் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
- வால்சன், மேலஅலங்காரதட்டு. 

* ஆத்தூர் பஸ் நிலையத்தை சுற்றிலும் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களும், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். இதில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காண வேண்டும். 
- ராமசாமி, ஆத்தூர்.

ஆபத்தான மின்கம்பம் 

தூத்துக்குடி வட்டக்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதேபோல் அங்குள்ள டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் 2 தூண்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மோசமாக காணப்படுகிறது. அந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள அந்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் தூண்களை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டுகிறேன். 
- வீரபாகு, வட்டக்கோவில். 

சாலை சீரமைக்கப்படுமா?

கயத்தாறில் இருந்து தேவர்குளம் செல்லும் சாலையில் ஆத்திகுளம் வரை சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதை தடுக்க சாலையை விரைந்து சீரமைத்தால் பொதுமக்களுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். 
- முகம்மது கபீர், அய்யனாரூத்து.

மேலும் செய்திகள்