பழைய இரும்பு குடோனில் தீ விபத்து
திருப்பூரில் அதிகாலையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆட்டோ 3 இருசக்கர வாகனங்கள் சேதமானது.
திருப்பூர்
திருப்பூரில் அதிகாலையில் பழைய இரும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆட்டோ, 3 இருசக்கர வாகனங்கள் சேதமானது.
இரும்பு குடோனில் தீ விபத்து
திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் பவானிநகர் 5-வது வீதியில் கணேஷ் என்பவர் பழைய இரும்பு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இங்கு பழைய துணிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் இந்த குடோனுக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து மளமளவென குடோன் முழுவதும் இருந்த பழைய பொருட்களுக்கு தீ பரவி பற்றி எரிந்தது.
தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்த, அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பழைய பொருட்கள் என்பதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்தனர்.
வாகனங்கள் சேதம்
இந்த தீ விபத்தில் குடோனுக்கு அருகில் நிறுத்தியிருந்த ஒரு ஆட்டோ, 3 இருசக்கர வாகனங்கள் சேதமானது. குடோனுக்குள் இருந்த பொருட்களும் நாசமானது. இதன் சேதமதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. புத்தாண்டையொட்டி அந்த பகுதியில் நள்ளிரவில் பட்டாசு வெடித்தபோது அதன் மூலம் தீ விபத்து ஏற்பட்டதா?, இல்லை மின்கசிவு காரணமாக தீப்பற்றியதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக வடக்கு போலீசார் விசாரிக்கிறார்கள். அதிகாலை நேரத்தில் நடந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.