தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தூத்துக்குடி:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் உருமாறிய வைரசான ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக குறைந்திருந்தது. ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே பாதிப்பு இருந்து வந்தது.
ஆனால், தற்போது ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவும் இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மட்டும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 10 பேர் கர்ப்பிணி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி நகர் பகுதியில் மட்டும் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அதே நேரத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர்.