மாந்தோப்பை அழித்து சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்டு மாற்று இடத்தை தேர்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு

மாந்தோப்பை அழித்து சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து மாற்று இடத்தை தேர்வு செய்தார்.

Update: 2022-01-01 07:39 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் ஊராட்சிக்கு சொந்தமான 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாந்தோப்பு உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட பழமையான மாமரங்கள் உள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு சமுதாய கூடம் அமைக்க போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தோப்பு தேர்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளிவாக்கம் ஊராட்சி மன்ற பொதுமக்கள் மாந்தோப்பை அழித்து போலீசாருக்காக சமுதாய கூடம் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் இது சம்பந்தமாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் ஆகியோர் போளிவாக்கம் பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் மாந்தோப்பு இடத்தில் சமுதாய கூடம் கட்டுவது தொடர்பாக விவாதித்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அதன் அருகே உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அருகில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் போலீசாருக்கு சமுதாய கூடம் கட்ட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டது.

அதைத்தொடர்ந்து எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் ஆகியோர் மாற்று இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், மாவட்ட தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் திராவிட பக்தன், பி.கே.நாகராஜ், போளிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சதீஷ்குமார் மற்றும் பலர் இருந்தனர்.

இந்த நிலையில் மாந்தோப்பை அழித்து சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக போளிவாக்கம் பகுதியை சேர்ந்த 59 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்