3-வது அலையை தடுக்க கடும் நடவடிக்கை; கலெக்டர்களுக்கு பசவராஜ் பொம்மை உத்தரவு

கர்நாடகத்தில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் 3-வது அலையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-31 21:19 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் 3-வது அலையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை உத்தரவிட்டுள்ளார். 

ஒமைக்ரான் பரவல்

தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் 2 பேருக்கு கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வைரஸ் டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் காலூன்றியது. 

இதற்கிடையே  டெல்லி, அரியானா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மராட்டியம், குஜராத், கர்நாடகம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த 8 மாநிலங்களிலும் ஒமைக்ரான்- கொரோனா பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

மேலும் 23 பேருக்கு பாதிப்பு

கர்நாடகத்தில் இதுவரை 30 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 38 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 43 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கர்நாடக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் அமெரிக்காவில் இருந்து வந்தவர்களில் 7 பேரும், நைஜீரியா, துபாய், தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த தலா 2 பேரும், தான்சானியாவில் இருந்து வந்தவர்களில் 3 பேரும், டென்மார்க், காங்கோ, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்களில் தலா ஒருவரும், ஏற்கனவே ஒமைக்ரானால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களில் 3 பேரும் என மொத்தம் 23 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அறிகுறி இல்லாதவர்கள்

அவர்களில் 19 பேர் பெங்களூருவையும், 2 பேர் மங்களூருவையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாடு, பீகாரை சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் அறிகுறி இல்லாதவர்களாக உள்ளனர். ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட சிலர் முழுமையாக மீண்டுவிட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் ஒமைக்ரான்-கொரோனா பரவலை தடுக்க அரசு இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

கலெக்டர்கள் மாநாடு

இந்த நிலையில், கர்நாடக அரசு சார்பில் 2021-ம் ஆண்டின் கடைசி நாளான நேற்று மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கை, வளர்ச்சிப் பணிகள், அரசின் திட்டங்களில் செயல்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

கூட்டத்தில், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட மந்திரிகள் மற்றும் தலைமை செயலாளர் ரவிக்குமார், உயர் அதிகாரிகள், 30 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய பசவராஜ்பொம்மை, கர்நாடகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, இதை தடுக்க எடுக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்றும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டார். 

3-வது அலையை எதிர்கொள்ள...

கூட்டம் முடிந்த பிறகு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதாவது படுக்கைகளை அதிகரிப்பது, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை சீராக வைத்துக் கொள்வது, மருந்துகளை கையிருப்பு வைப்பது போன்றவை குறித்து உத்தரவிட்டுள்ளேன். 97 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

2-வது டோஸ் தடுப்பூசி

ஜனவரி மாத இறுதிக்குள் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும். 2-வது டோஸ் தடுப்பூசியும் போட நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். அரசின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தும்படியும், பயனாளிகளுக்கு அதன் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டேன். கிராமங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும்படி அறிவுறுத்தினேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

தீவிர நடவடிக்கை

இதுபோல் நேற்று மாலையில் பசவராஜ்பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும், அவற்றை தடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மருந்துகள், ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிக்கப்படும்.

இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் விமர்சித்துள்ளார். இது இந்து மக்கள் மற்றும் பக்தர்களின் எதிரான அவரது நிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்