பொங்கல் பரிசு பொருட்கள் 4-ந் தேதி முதல் வழங்கப்படும்-கலெக்டர் கார்மேகம் தகவல்

பொங்கல் பரிசு பொருட்கள் வருகிற 4-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறி உள்ளார்.

Update: 2021-12-31 21:15 GMT
சேலம்:
பொங்கல் பரிசு பொருட்கள் வருகிற 4-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று கலெக்டர் கார்மேகம் கூறி உள்ளார்.
பொங்கல் பரிசு பொருட்கள்
இது தொடர்பாக கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 57 ஆயிரத்து 998 ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் முகாமில் வசிக்கும் 886 பேர் உள்பட மொத்தம் 10 லட்சத்து 58 ஆயிரத்து 884 ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.56 கோடியே 97 லட்சத்தில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 4-ந் தேதி முதல் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படஉள்ளது.
ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதை தவிர்க்க ஒரு நாளைக்கு காலை, மதியம் என 2 வேளைகளில் 200 பேருக்கு வழங்கப்படும். முன்னதாக அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்படும். எனவே டோக்கன்களில் உள்ள தேதி, நேரப்படி பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மஞ்சள் தூள்
இந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை தலா ஒரு கிலோ முந்திரி, திராட்சை, பாசிப்பருப்பு தலா 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம் தலா 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுந்தம்பருப்பு, உப்பு தலா 500 கிராம், முழு கரும்பு உள்பட 21 பொருட்கள் அடங்கும். 
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்