பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் கைது
துமகூருவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
துமகூரு: துமகூருவில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா சிரா டவுனில் அரசு உருது பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு தலைமை ஆசிரியராக முகமது இக்பால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அப்பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவி ஒருவரை தனது அலுவலக அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சம்பவத்தை வெளியே கூறாமல் இருக்கும்படி சொல்லி ரூ.50-ம் கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவி சம்பவம் பற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். பின்னர் மாணவியின் பெற்றோர், இதுகுறித்து சிரா போலீசிலும், மதுகிரி தாலுகா கல்வித்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தியிடமும் புகார் அளித்தனர்.
தலைமை ஆசிரியர் கைது
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முகமது இக்பால், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது இக்பாலை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர் சிரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முகமது இக்பாலை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.