நின்ற லாரி மீது கார் மோதல்; ஆசிரியர் உடல்நசுங்கி பலி

நின்ற லாரி மீது கார் மோதியதில் ஆசிரியர் உடல்நசுங்கி இறந்தார்.

Update: 2021-12-31 20:32 GMT
பெரம்பலூர்:

ஆசிரியர் தம்பதி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சித்தூர் சாலையில் உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி(30). இவர் அரக்கோணத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் காவியாசாதனா(10).
இந்நிலையில் ராஜேஷ் தனது காரில் குடும்பத்துடன் மகேஸ்வரியின் சொந்த ஊரான தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டைக்கு சென்றார். அங்கு அவர்கள் உறவினர்களை பார்த்துவிட்டு நேற்று திருத்தணிக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். காரை ராஜேஷ் ஓட்டினார்.
லாரி மீது மோதல்
நேற்று அதிகாலை அவரது கார் பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்றது. அப்போது சாலையின் இடது ஓரத்தில் விதைநெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வாலாஜாபாத்திற்கு செல்வதற்காக நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக ராஜேசின் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய ராஜேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகேஸ்வரி, காவியா சாதனா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து சென்னையில் டாக்டராக பணிபுரிந்து வரும் ராஜேசின் தம்பி வெங்கடேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது உறவினர்களுடன் உடனடியாக பெரம்பலூருக்கு விரைந்து வந்தார். அவர்களிடம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் ராஜேசின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தாலுகா பெருமாள்கோவில்வலசு பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்