சரக்கு ஆட்டோவில் பிணமாக கிடந்த வாலிபர்
சரக்கு ஆட்டோவில் வாலிபர் பிணமாக கிடந்தார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி- மண்ணுழி சாலையில் ஒரு சரக்கு ஆட்டோ நேற்று காலை முதல் நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆட்டோவின் உள்ளே பார்த்தபோது ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து நடத்திய விசாரணையில், இறந்து கிடந்தவர் அரியலூர் மாவட்டம் த.பழூர் சாலை கீழவிளாங்குடி கிராமத்தை சேர்ந்த முத்துலிங்கத்தின் மகன் திருநாவுக்கரசு(வயது 30) என்பதும், அவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.