திண்டுக்கல் அருகே நூற்பாலை வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளர்கள் 12 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே நூற்பாலை வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பித்தளைப்பட்டி பிரிவில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று பணி முடிந்து வேனில் தங்களது கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை மாங்கரையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 26) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் வந்த வக்கம்பட்டியை சேர்ந்த மருதாயி (வயது 47), கார்த்திகா (26), அருள் ஜான்சி (35), ராஜேஸ்வரி (42), செந்தமிழ்ச்செல்வி (43) உள்பட 12 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.