குமரியில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு ெகாண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. கடற்கரைகளுக்கு செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நாகர்கோவில்:
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. கடற்கரைகளுக்கு செல்ல முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
3 நாட்கள் தடை
தமிழகத்தில் புதியவகை கொரோனாவான ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில், கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகள், நீர்வீழ்ச்சி மற்றும் சுற்றுலா தலங்களுக்கு நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை சுற்றுலா பயணிகள் செல்ல 3 நாட்கள் தடை விதித்து கலெக்டர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஆனால் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நேற்றும் வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். ஆனால் கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
படகு போக்குவரத்து ரத்து
மேலும், கன்னியாகுமரி கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விடுதிகளில் புதுவருடப்பிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் நேற்று கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத் துறை செல்லும் சாலையில் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கூட்டம் அலைமோதியது. உடனே அங்கு வந்த போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கோவிலில் கூட்டம்
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், திரிவேணி சங்கமம் கடற்கரை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
அதே சமயம் கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகளில் பெரும் பாலானவர்கள் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் அங்கு அதிக கூட்டம் இருந்தது.
தொட்டி பாலம்
முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தின் இரு பகுதியிலும் சுற்றுலா பயணிகள் செல்ல முடியாத வகையில் அருவிக்கரை கிராம பஞ்சாயத்து மற்றும் திருவட்டார் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்புடன் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதனால் யாரும் தொட்டி பாலம் உள்ளே செல்ல முடியவில்லை.
இந்தநிலையில் சுற்றுலா வந்த சிலர் பக்கத்து ஊர் திருமணத்துக்குச்செல்கிறோம் என்று பொய்யாக கூறி விட்டு, தடுப்பு வேலியை அகற்றி வைத்து விட்டு தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். இதை உள்ளூர் மக்கள் பார்த்து விட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே தொட்டிபாலம் பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து தொட்டிப்பாலம் பகுதியில் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டு, தொட்டிப்பாலத்தை பார்க்க வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
திற்பரப்பு
திற்பரப்பு அருவிக்குச்செல்லும் பகுதியையொட்டி கம்புகளால் தடுப்பு வேலி அமைத்து சுற்றுலா பயணிகள் செல்ல முடியாதவகையில் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் தடுப்பு வேலி அருகில் சென்று தூரத்தில்பாயும் அருவியை பார்த்து ரசித்து விட்டு, திரும்பி சென்றனர். படகு சவாரியும் நடைபெறவில்லை.
இதனால் குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களை இழந்து காணப்பட்டது.
நாகர்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்களோ, சுற்றுலா பயணிகளோ செல்லாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டது. சில இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
1,500 போலீசார்
புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் சுழற்சி முறையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்திப்பு, மேம் பாலங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் என 50 இடங்ளில் தற்காலிக பேரிக்காா்டு அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் இறங்கியுள்ளனர். நாகர்கோவில் வடசேரி புத்தேரி பாலம், பார்வதிபுரம் பாலம் ஆகிய பகுதிகளில் பைக் ரேஸ்களில் வாலிபர்கள் ஈடுபட்டுள்ளனரா எனவும் வாகனத்தில் சென்று போலீசார் கண்காணித்தனர்.