பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
ஆரல்வாய்மொழியில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் பெண்ணிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
ஓட்டல்
ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருடைய மனைவி ரத்தினம் (வயது 65). இவர்களது மகன் பாலகிருஷ்ணன் ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார்.
அந்த ஓட்டலுக்கு நேற்று காலையில் ரத்தினம் சென்றார். ஓட்டலில் இருந்தபோது அங்கு ஒரு மர்ம நபர் வந்து, ரத்தினத்திடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். மேலும் உங்கள் மகனை எனக்கு நன்றாக தெரியும். எனக்கு பணகுடி தான் சொந்த ஊர். நான் தான் உங்கள் ஓட்டலுக்கு மளிகை பொருட்கள் சப்ளை செய்பவன் என்று கூறிவிட்டு, பாலகிருஷ்ணனிடம் செல்போனில் பேசுவதுபோல் நடித்துள்ளார்.
தங்க சங்கிலி பறிப்பு
பின்னர் ரத்தினம் தண்ணீர் கொண்டுவர உள்ளே சென்றார். அவரை தொடர்ந்து மர்மநபரும் சென்று, திடீரென்று ரத்தினம் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். அந்த சங்கிலியை ரத்தினம் விடாமல் பிடித்துக்கொண்டு போராடினார். மர்ம நபரின் சட்டையை பிடித்து இழுத்துள்ளார். பின்னர் ரத்தினத்தை மர்மநபர் கீழே தள்ளிவிட்டு தங்க சங்கிலியை பறித்து கொண்டு சென்றார்.
கீழே விழுந்த ரத்தினம் எழுந்திருக்க முடியாமல் சிரமபட்டார். அப்போது மீண்டும் ஓட்டலுக்குள் மர்ம நபர் வந்தார். உடனே, ரத்தினம் அடப்பாவி என்னை இப்படி தள்ளி விட்டாயே என்று கூறி விட்டு, திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். உடனே அந்த மர்ம நபர் ஓடிவிட்டார்.
போலீசார் விசாரணை
சிறிது நேரத்தில் இசக்கிமுத்து அங்கு வந்தார். அவரிடம் ரத்தினம் நடந்தது பற்றி கூறினார். இதுபற்றி ரத்தினம் ஆரல்வாய்மொழிபோலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படை போலீசார் வந்து மர்ம நபரின் அடையாளங்களை கேட்டறிந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆரல்வாய்மொழியில் பட்டப்பகலில் ஓட்டலுக்குள் புகுந்து பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.