வேலூர்
வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் அஜித்குமார் (வயது 25). ராணுவவீரர். இவரும், சாத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அடிக்கடி காதலியை தனிமையில் சந்தித்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அவரிடம் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தார். அதற்கு அஜித்குமார் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.