பேளுக்குறிச்சியில் பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
பேளுக்குறிச்சியில் பெண்ணை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
சேந்தமங்கலம்:
பேளுக்குறிச்சி ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 39). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உமா (36). இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதையொட்டி கடந்த 2019-ம் ஆண்டு சம்பவத்தன்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் மனைவி உமாவை கொடுவாளால் வெட்டி கொல்ல முயன்றார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இதையடுத்து கணவன், மனைவி பிரிந்ததால் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலம்பரசன் உமா வீட்டிற்கு சென்று போலீஸ் நிலையத்தில் கொடுத்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமா கழுத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயம் அடைந்த உமா மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பேளுக்குறிச்சி போலீசார் சிலம்பரசன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.