கச்சிராயப்பாளையம் அருகே துணிகரம் வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ 3 லட்சம் நகைகள் கொள்ளை
கச்சிராயப்பாளையம் அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ 3 லட்சம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. போலீஸ் என்று கூறி கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
கச்சிராயப்பாளையம்
லாரி டிரைவர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே உள்ள காரனூர் காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி அலமேலு(வயது 40). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறார். மகன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அண்ணாமலை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அலமேலு வீட்டில் தனியாக படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 2 மணியளவில் இவரது வீ்ட்டின் முன்பக்க கதவை மர்மநபர்கள் தட்டியுள்ளனர். அப்போது அவர்கள் நாங்கள் போலீஸ்காரர்கள் தான் பயப்படாமல் கதவை திறங்கள் என்று கூறியுள்ளனர்.
நகைகள் கொள்ளை
இதில் திடுக்கிட்டு எழுந்த அலமேலு போலீஸ்காரர்கள்தான் என நம்பி கதவை திறந்தார். அப்போது 3 பேர் வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், நீங்கள் 12 வயது மதிக்கத்தக்க பெண்ணை மறைத்து வைத்திருப்பதாகவும், வீ்ட்டை சோதனை செய்ய வேண்டும் என்றும் அலமேலுவிடம் கூறினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த அலமேலுவை 2 மர்ம நபர்கள் திடீரென பிடித்துக்கொண்டு அவரது வாயில் துணியை வைத்து அமுக்கி தாக்கினர். இதற்கிடையே வாசலில் நின்று கொண்டிருந்த மற்றொரு நபர், வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 9 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து மற்ற 2 நபர்களும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அலமேலு கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப் பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
அடுத்தடுத்த சம்பவம்
இதே போல் பாதரம்பாளையம் கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காவலாளியை கட்டிப்போட்டு வீ்ட்டில் இருந்த 7½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே மற்றொரு கொள்ளை அரங்கேறி இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.