திருக்கோவிலூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருக்கோவிலூர் அருகே வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

Update: 2021-12-22 17:23 GMT


திருக்கோவிலூர்

வீடுகளைசூழ்ந்த மழைநீர்

திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் கோட்டமருதூர் சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்தனர். 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தேங்கி நின்ற மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் 20 நாட்கள் ஆகியும் இதுவரை வீடுகளை சூழ்ந்த மழைநீரை அப்புறப்படுத்த மணம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

சாலை மறியல்

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சுமார் 100 பேர் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து கழக பணிமனை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கோஷம் எழுப்பினர். 
இதுபற்றிய தகவலறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்