தலைமுடி சிகிச்சை மையம் அமைத்து தருவதாக கூறி வேதாரண்யத்தை சேர்ந்த முதியவரிடம் ரூ.15 லட்சம் மோசடி டாக்டர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு

தலைமுடி சிகிச்சை மையம் அமைத்து தருவதாக கூறி வேதாரண்யத்தை சேர்ந்த முதியவரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக டாக்டர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-12-22 16:43 GMT
நாகப்பட்டினம்:-

தலைமுடி சிகிச்சை மையம் அமைத்து தருவதாக கூறி வேதாரண்யத்தை சேர்ந்த முதியவரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக டாக்டர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

தலைமுடி சிகிச்சை மையம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தலைஞாயிறு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது ஹாலீத்(வயது 60). இவர், தனது தலைமுடி சிகிச்சைக்காக கடந்த 2019-ம் ஆண்டு சென்னை காரம்பாக்கத்தில் உள்ள தனியார் சிகிச்சை மையத்திற்கு சென்றார். 
அப்போது அங்கிருந்த பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஹோகன் மற்றும் ராஜாராம், அஸ்ரத்தேவராஜ், நந்தகுமார், ஷெல்லி லெதர் ஆகிய 5 பேருடன் முகமது ஹாலீத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. 
அவர்கள் தலைஞாயிறு பகுதியில் முடிசிகிச்சை மையத்தை தொடங்க வேண்டும் என்றும், அதற்கு பொருளாதார உதவி செய்ய வேண்டும் என்றும் முகமது ஹாலீத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். 

ரூ.15 லட்சம்

இதனையடுத்து முகமது ஹாலீத் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.15 லட்சத்தை அவர்கள் 5 பேரும் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து தனியார் முடிசிகிச்சை மையத்திற்கான உரிம கடிதத்தை 5 பேரும் கொடுத்தனர். 
இந்த நிலையில் தலைமுடி சிகிச்சை மையத்தின் கிளையை தலைஞாயிறு பகுதியில் தொடங்க அனுமதி கிடைக்கவில்லை என்றும், கோவையில் தொடங்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். இதையடுத்து முகமது ஹாலீத், தான் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பி தரும்படி அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 5 பேரும் பணத்தை திருப்பித்தருவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். 

டாக்டர் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு

ஆனால் ஒப்புக்கொண்டபடி பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காததால் தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த முகமதுஹாலீத், நேற்று முன்தினம் நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். 
இந்த புகாரின் பேரில் டாக்டர் ஹோகன், ராஜாராம், அஸ்ரத்தேவராஜ், நந்தகுமார், ஷெல்லிலெதர் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்