பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

Update: 2021-12-22 16:03 GMT
கோத்தகிரி

திருவிழாவையொட்டி பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கிராமமே விழா கோலம் பூண்டது.

ஹெத்தையம்மன் கோவில் திருவிழா

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் தொத நாடு, பொரங்காடு, மேக்கு நாடு மற்றும் குந்தை சீமை என 4 எல்லைகளில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் குல தெய்வமான ஹெத்தையம்மன் திருவிழாவை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. பண்டிகை யின் முக்கிய நாளான நேற்று கோத்தகிரி அருகே உள்ள பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

ஏராளமானோர் குவிந்தனர்

படுகர் சமுதாய மக்கள் தங்களது பாரம்பரிய வெள்ளை உடையணிந்து, காலில் செருப்பு அணியாமல், இசைக்கருவிகள் முழங்க ஆடல் பாடல் களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். 

விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு மடியாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலமாக பேரகணிக்கு சென்றதால், கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

போக்குவரத்து மாற்றம்

இதனால் கோத்தகிரியில் இருந்து பேரகணிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும், மிளிதேன் வழியாக சென்று சுண்டட்டி கிராமம் மற்றும் கப்பட்டி கிராமங்கள் வழியாக திரும்பி வரும் வகையில் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருந்தது. 

மேலும் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

விழாக்கோலம்

மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பேரகணி செல்லும் சாலை யோரங்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு இருந்தன. பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா காரணமாக பேரகணி கிராமமே விழா கோலம் பூண்டு, மக்கள் வெள்ளத்தில் நிறைந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்