தென்கரைக்கோட்டையில் பெண் டாக்டர் கடத்தல் வாலிபர் மீது புகார்

தென்கரைக்கோட்டையில் பெண் டாக்டரை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-22 15:28 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஜம்மனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகள் அருள்மொழி (வயது 26). ஹோமியோபதி டாக்டரான இவர் தென்கரைக்கோட்டை பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கிளினிக்கிற்கு சென்ற அருள்மொழி இரவு 9 மணி ஆன பிறகும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த வேலாயுதம் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக கிளினிக்கில் விசாரித்தபோது ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் அருள்மொழியை அழைத்து சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து வேலாயுதம் ஆர்.கோபிநாதம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தென்கரைக்கோட்டை பகுதியை சேர்ந்த சல்மான்கான் (26), அவருடைய தந்தை ஆகியோர் தங்கள் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்