சரக்கு வாகனம் மோதி துணி வியாபாரி பலி

சரக்கு வாகனம் மோதி துணி வியாபாரி பலி

Update: 2021-12-22 13:52 GMT
ராயக்கோட்டை:
உத்தனப்பள்ளி அருேக சரக்கு வாகனம் மோதி துணி வியாபாரி பலியானார்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
துணி வியாபாரி
தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36), துணி வியாபாரி. இவர் ஊர் ஊராக சென்று தவணை முறையில் துணிகளை விற்பனை செய்வதும், பின்னர் அதற்கான பணத்தை ஒவ்வொரு வாரமும் தவணை முறையில் வசூல் செய்தும் வந்துள்ளார்.
அந்த வகையில் விற்பனை செய்த துணிகளுக்கான பணத்தை வசூல் செய்ய நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றார். கெலமங்கலத்தில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
பலி
தேன்துர்க்கம் பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் சுரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, உத்தனப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
சரக்கு வாகன டிரைவர், வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. உடனே போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி கதறல்
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்து சுரேஷின் மனைவி நாகராணி (32), மகள் அனிஷ்கா (11) மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுரேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர். அதிலும் சுரேஷின் மனைவி கதறல் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
விபத்து தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்