தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-12-22 13:10 GMT
கோவை

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய பொதுக்குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு அடுத்த ஆண்டு(2022) அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்க இருக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

மாநாட்டில் விவாதிக்கக்கூடிய அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காக அடுத்த மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் தேசிய பொதுக்குழு கூட்டம், கோவை பீளமேட்டில் நடக்கிறது. இதில் 125 தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். சர்வதேச மற்றும் தேசிய அரசியல் நிலை அறிக்கையாக முன் வைக்கப்பட இருக்கிறது.

வேலைவாய்ப்பு இழப்பு

நாட்டில் ஜனநாயக விரோத ஆட்சி நடைபெறுகிறது. ஹிட்லரை போன்று பாசிச ஆட்சி நடக்கிறது. இது பேராபத்து ஆகும். பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதற்காக தொழிலாளர்களை நசுக்கி வருகிறது. ஆட்சி பொறுப்பேற்கும்போது 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாக மோடி உறுதியளித்தார். ஆனால் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து வருகின்றனர். 

மத்திய அரசு என்ன விரும்புகிறதோ அதன்படி தலைமை நீதிபதிகள் செயல்படுகின்றனர். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாத நிலையை பா.ஜனதா உருவாக்கி இருக்கிறது. மதச்சார்பின்மை கொள்கைக்கு நேர்மாறான ஆட்சி நடக்கிறது. நாடு முழுவதும் தற்போது 23 பஞ்சாலைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது. அதில் தமிழ்நாட்டில் 7 பஞ்சாலைகள் இயங்குகின்றன. மத்திய அரசு நிர்வகிக்க தவறினால் தமிழகத்தில் உள்ள ஆலைகளை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும்.

கட்சி ஆண்டு விழா

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் தாக்குதலை தடுக்க  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 26-ந் தேதி கட்சியின் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. அதே நாளில் மூத்த தலைவர் நல்லகண்ணு பிறந்தநாளும் கொண்டாடப்பட உள்ளது. அடுத்த நாள் 27-ந் தேதி சென்னையில் மறைந்த தா.பாண்டியனின் உருவப்படத்தை நல்லகண்ணு திறந்து வைக்கிறார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்