சொத்துக்களை பிரித்து வாங்கி துரத்தி விடப்பட்ட 8 பிள்ளைகளின் 94 வயது தாய்... பிச்சை எடுக்கும் அவலம்
மகன்கள், மகள்கள் 8 பேர் சொத்துகளை பிரித்து வாங்கி விட்டு 94 மூதாட்டியை விரட்டி விட்டதால் அவர் பி்ச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு ஏழுமலை, டில்லிபாபு, தருமன், ஜோதி, சிவக்குமார் என 5 மகன்கள், கானாபாய், ஜெயந்தி, சரளா என 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அலமேலுவின் கணவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அலமேலுவுக்கு மீஞ்சூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, கடை போன்றவை இருந்ததாகவும் அவற்றில் சில சொத்துக்களை விற்று 8 பேருக்கும் பிரித்து கொடுத்ததாகவும் தெரிகிறது.
அலமேலுவை பராமரிக்க மகன்களோ, மகள்களோ முன்வராததால் அவர் மீஞ்சூரில் உள்ள கோவிலில் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் மூதாட்டியின் கையை உடைத்து வீட்டில் அனுமதிக்காமல் தகராறில் ஈடுபட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வந்த கலெக்டர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு புகார் அளித்தார். அந்த புகாரில் 8 குழந்தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கிய நிலையில் சொத்துகளை அபகரிக்கும் நோக்கத்தோடு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் வீட்டுக்கு சென்று வாழ்நாளை கழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மூதாட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.