தேவூர் பகுதியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள மஞ்சள் குலைகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேவூர் பகுதியில் மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராகி உள்ளன.
தேவூர்
மஞ்சள் குலை
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் என்றாலே மஞ்சள் குலையும் நிச்சயம் இடம் பெறும். பொங்கல் பண்டிகை அன்று புதுப்பானையில மஞ்சள் கிழங்கு குலையை சுற்றிக்கட்டி, அடுப்பில் வைத்து பொங்கலிடுவது வழக்கம். அந்த மஞ்சளை பத்திரப்படுத்தி வைப்பார்கள்.
மறுநாள் காலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள், அந்த மஞ்சளை கீறி குடும்பத்தினருக்கு நெற்றியில் பூசி ஆசி வழங்குவார்கள். இதன்காரணமாக மஞ்சள் குலை ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது அதிகளவில் விற்பனையாகும்.
தேவூர்
தமிழகத்தில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்றாயனூர், பெரமச்சி பாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம், பாலிருச்சம் பாளையம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர்.
மஞ்சள் சாகுபடி செய்த 9 மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். அந்த வகையில் பிப்ரவரி மாதம் அறுவடைக்கு தயாராகும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் விவசாயிகள் மஞ்சள் கிழங்கு சாகுபடி செய்வார்கள். அதே போல் இந்த ஆண்டு ஜூன் மாதம் தேவூர் சுற்றுவட்டார விவசாயிகள் கிணற்று பாசன தண்ணீரை பயன்படுத்தி சம்பா, சேலம் செலக்சன், பி.டி.எஸ். 10, ராஜமுந்திரி உள்ளிட்ட ரக மஞ்சளை சாகுபடி செய்துள்ளனர்.
மஞ்சள் காலோட்டம்
அவ்வாறு சாகுபடி செய்யப்பட்டு 8 மாதங்கள் ஆன வயல்களில் தற்போது மஞ்சள் செடிகள் செழித்து வளர்ந்து மண்ணில் மஞ்சள் காலோட்டம் நடைபெற்று விளைச்சல் அடைந்து உள்ளது.
இதில் குறிப்பிட்ட சில விவசாயிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இள மஞ்சள் குலைகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். தற்போது சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் தேவூர் பகுதியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் பொங்கல் பண்டிகைக்கு நகர்ப்புற பகுதிகளில் விற்பனை செய்வதற்காக மஞ்சள் குலைகளை விவசாயிகளிடம் நேரடியாக வயல் பகுதிக்கு வந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.
தோட்டத்தில் உள்ள மஞ்சள் குலைகள் தற்போது விற்பனை செய்யப்பட்டாலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் தான் அறுவடை செய்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேவூர் பகுதியில் மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் தெரிவித்தனர்.