மேகதாது திட்டத்தை அமல்படுத்துவது உறுதி - பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்த அரசு உறுதியாக உள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2021-12-21 21:04 GMT
பெங்களூரு:

மேகதாது திட்டம்

  கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் கூட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 7-வது நாள் கூட்டம் நேற்று பெலகாவி சுவர்ண சவுதாவில் நடைபெற்றது.

  நேற்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடாந்து பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கேள்வி நேரத்தில் ஒசக்கோட்டை தொகுதி சுயேச்சை உறுப்பினர் சரத் பச்சேகவுடா, மேகதாது திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

மத்திய நீர் ஆணையம்

  ரூ.9 ஆயிரம் கோடியில் 67.16 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) கொள்ளளவு கொண்ட அணையை கட்ட திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்திற்கு காவிரி நிர்வாக ஆணையத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். திட்ட அறிக்கையை அந்த ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். அதேபோல் மத்திய நீர் ஆணையம், சுற்றுச்சூழல்-வனத்துறையின் ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

  இந்த திட்டத்தில் ராமநகர், மண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் 5,257 எக்டேர் பரப்பளவு நிலம் நீரில் மூழ்கும். இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். இதற்காக 4.75 டி.எம்.சி. நீர் எடுக்கப்படும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த அரசு உறுதியாக உள்ளது. இதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

அமைதியாக இருக்கவில்லை

  அந்த ஆணையத்தின் ஒப்புதலை பெற்றவுடன் மேகதாது திட்டத்தை தொடங்குவோம். நாங்கள் அந்த ஆணையத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்கவில்லை. தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியுள்ளது. இதுபற்றி மத்திய அரசுடன் பேசியுள்ளோம். முன்பு திட்ட அறிக்கையை தயாரிக்க காலதாமதமானது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இதற்கிடையே மேகதாது திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் மேகதாது முதல் பெங்களூரு வரை பாதயாத்திரை வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி தொடங்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். 9-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2023-ம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேகதாது பிரச்சினையை காங்கிரஸ் முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்