மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு உரிமை கிடையாது - சித்தராமையா ஆவேசம்
மேகதாது திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு உரிமை கிடையாது என்று முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.
பெலகாவி:
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாதயாத்திரை
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இந்த திட்ட பணிகளை மாநில அரசு தொடங்கவில்லை. இந்த இரட்டை என்ஜின் அரசு, பணிகளை தொடங்கி இருக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த திட்ட பணிகளை தொடங்கி இருப்போம்.
பணிகளை தொடங்க இந்த அரசுக்கு தைரியம் இல்லை. அதனால் இந்த திட்ட பணிகளை தொடங்க வலியுறுத்தி மேகதாது முதல் பெங்களூரு வரை பாதயாத்திரையை காங்கிரஸ் மேற்கொள்கிறது. இந்த பாதயாத்திரை வருகிற ஜனவரி மாதம் 9-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை எந்த நீர்ப்பாசன திட்டத்தையும் அமல்படுத்தவில்லை.
குடிநீர் பிரச்சினை
ஆனால் அனைத்து திட்ட நிதியிலும் 40 சதவீத கமிஷனை பா.ஜனதா அரசு விழுங்கி வருகிறது. கடந்த 1968-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் பணிகளை தொடங்க முடியவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.5,912 கோடியாக இருந்தது. இது 2018-ம் ஆண்டு ரூ.9,500 கோடியாக அதிகரித்துள்ளது.
பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது, மின்சாரம் தயாரிப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். சிக்பள்ளாப்பூர், கோலார், பெங்களூரு புறநகர் பகுதிகளும் மேகதாது திட்டத்தால் பயன்பெறும். சட்டப்படி இந்த திட்டத்தை எதிர்க்க தமிழக அரசுக்கு உரிமை கிடையாது.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.