குற்றாலத்தில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்- தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Update: 2021-12-21 20:52 GMT
தென்காசி:
குற்றாலம் அருவிகளில் நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

2-வது நாளாக ஆனந்த குளியல்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள், அய்யப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். 
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்தனர். அருவிகளில் தண்ணீர் சுமாராக விழுந்த போதிலும், கூட்டம் குறைவாக இருந்ததால் அவர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

திருப்பி அனுப்பப்பட்ட சுற்றுலா பயணிகள்
முன்னதாக குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளை அருவிகளின் நுழைவு பகுதியில் அதிகாரிகள் நிறுத்தி 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்து இருந்தவர்களை மட்டுேம குளிக்க அனுமதித்தனர்.
மற்ற சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சில பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டது. அருவிப்பகுதி வளாகத்தில் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று கடை வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்களா? என்று அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்