100 நாட்கள் வேலைவாய்ப்பை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேச்சு

100 நாள் வேலை வாய்ப்பை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என்று சத்தியமங்கலத்தில் நடந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

Update: 2021-12-21 20:04 GMT
100 நாள் வேலை வாய்ப்பை 200 நாட்களாக அதிகரிக்க  வேண்டும் என்று சத்தியமங்கலத்தில் நடந்த விழாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
கொடியேற்று விழா
தமிழக மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா சத்தியமங்கலத்தில் நேற்று நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கோஷம் எழுப்பியபடி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தார்கள். கொடியேற்று விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பெரியசாமி, ஈரோடு மாவட்ட சங்க செயலாளர் சி.கே.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்கள்.
200 நாட்களாக்க வேண்டும்
விழாவில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ரூ.300 தினக்கூலி என்பதை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். இந்த 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வது குறைத்து வருகிறது.
போராடிதான் பெறுகிறோம்
இந்த பகுதியில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு தொழிலாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது. அப்போது பல்வேறு போராட்டங்களை நம் இயக்கத்தின் சார்பில் நடத்தி பெற்றுக் கொடுத்தோம். 100 நபர்கள் என்பதை 105 நபர்கள் என பதிவு செய்து நம் ஊதியத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்கிய பெருமுதலாளிகள் அசல் வட்டி எதுவும் கட்டாமல் அவர்கள் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால் நம்மைப் போன்ற சிறிய விவசாயிகள் பணம் கட்ட முடியவில்லை என்றால் உடனே ஜப்தி செய்யப்படுகிறது.
நம்முடைய விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை கிடைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு அனைத்து சமூக பாதுகாப்புகளுடன் நல வாரியம் அமைத்திட வேண்டும். போராடிப் போராடித்தான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், சத்தியமங்கலம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஸ்டாலின் சிவக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்தர், தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்