கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்ட வாலிபர்

கத்தியை காட்டி வாலிபர் ரகளையில் ஈடுபட்டார்.

Update: 2021-12-21 19:50 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் ஒருவர் மேலாடையின்றி மதுபோதையில், அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசியதோடு, பெண்கள் மற்றும் வணிகர்களிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு ரகளை செய்துள்ளார். மேலும் பஸ்சில் ஏறியும், ஓடும் பஸ்சை நிறுத்தியும் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். பெண்களிடம் ஆபாசமாகவும் பேசி உள்ளார். அங்கிருந்த ஓட்டல் மற்றும் கடைகளில் பொருட்களை எடுத்துக்கொண்டு காசு கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டியதால், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் புதிய பஸ் நிலைய பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசாரிடம் அந்த வாலிபரை ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர் துறைமங்கலத்தை சேர்ந்த விஜயராஜ்(வயது 30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்