தென்பெண்ணையாறு கரையில் மீண்டும் மண் சரிவு
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாறு கரையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடலூர்,
கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தென்பெண்ணையாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கும்தாமேடு தடுப்பணை உள்ளது. சமீபத்தில் பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தடுப்பணையை தாண்டி தண்ணீர் பாய்ந்து சென்றது. கரையோரம் இருந்த பயணிகள் நிழற்குடை அரிப்பு ஏற்பட்டு சாய்ந்தது. இதை அதிகாரிகள் ஆற்றில் இடித்து தள்ளினர்.
தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சாலையிலும் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மாற்றுப்பாதை வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் சேதமடைந்த சாலை மற்றும் தென்பெண்ணையாறு கரையை நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி கரையோரம் சவுக்கு கட்டைகள் வைத்து, மண் கொட்டியும், மணல் மூட்டைகள் அடுக்கியும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதையடுத்து அந்த வழியாக வாகன போக்குவரத்து தொடங்கியது.
மண் சரிவு
இந்த நிலையில் நேற்று காலையில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மணல் மூட்டைகள் அடுக்கி வைத்திருந்த ஒரு பகுதி சரிந்து ஆற்றில் விழுந்தது. இதை பார்த்து நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து மண் அரிப்பு ஏற்படாதவாறு, சரிந்து விழுந்த இடத்தில் கூடுதலாக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த கரையையும், சாலையையும் தரமான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.