புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை

கடலூரில் கஞ்சா, சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றும், புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

Update: 2021-12-21 18:27 GMT
கடலூர், 

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மன்ற அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரிஸ்வானா பர்வீன், செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தலைவர் மற்றும் அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-
திருப்பாதிரிப்புலியூரில்   சாராயம் விற்பனை 
முத்துக்கிருஷ்ணன் (பா.ம.க.) :- இந்த கூட்டத்தில் கலெக்டர் பங்கேற்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியும், அவர் பங்கேற்கவில்லை. மக்கள் பிரச்சினைகளை கேட்க அவர் தயாராக இல்லை. இது வருத்தத்தை அளிக்கிறது. பா.ம.க. சார்பில் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்த கூட்டத்தில் அவர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிரிக்குப்பம் ரெங்கநாதன்நகரில் மாநகராட்சி குப்பைகள் கொட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அறிகிறோம். இதை கைவிட வேண்டும். வேறு இடத்தில் குப்பைகள் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூரில் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது. திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் சாராயத்தை கூவி, கூவி விற்பனை செய்து வருகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தை விட இங்கு விலை குறைவாக கிடைக்கிறது. இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

உரம் விலை

உரக்கடைகளில் பொட்டாஷ் விலை ரூ.1700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.1040 விற்க வேண்டும் என்று அமைச்சர் கூறியும், விலை குறையவில்லை. கோமாரி நோயால் இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
சக்தி (வட்டார வளர்ச்சி அலுவலர்) :- பாதிரிக்குப்பம் ரெங்கநாதன்நகரில் குப்பை கொட்ட இடம் பார்க்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆகவே மாற்று இடம் குறித்து கலெக்டர் ஆலோசனை செய்து வருகிறார்.
கால்நடை அதிகாரி:- கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நோயால் இறந்த கால்நடைகள் குறித்த புள்ளிவிவரம் வருவாய்த்துறையினரிடம் வழங்கி விட்டோம்.
சக்திவிநாயகம் (தி.மு.க.) :- வேப்பூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்கவில்லை. எனவே முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைவர்:- அதிகாரிகள் கணக்கெடுத்து. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்கள்.

பள்ளி கட்டிடம்

கந்தசாமி (ம.தி.மு.க.) :- சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கட்டிடத்தை இடித்தால், இட நெருக்கடி போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதை தீர்க்க, அங்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்.
தலைவர்: இது பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்போம்.
டாக்டர் தமிழரசி (பா.ம.க.) :- பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு தேவை. கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும். 

அவகாசம்

ரகுராமன் (அ.தி.மு.க.) :- என்.எல்.சி. நிர்வாகம் விரிவாக்க பணிகளை செய்கிறது. இதற்காக அந்த பகுதியில் உள்ள கிராமங்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆகவே பள்ளி மாணவர்கள் படிப்பு முடிந்து விடுமுறை விடும் வரை அவகாசம் அளித்து அவர்களை காலி செய்யக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.
தலைவர்:- இது பற்றி என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும்.
சித்ரா ராமையன் (த.வா.க.) :- தம்பிப்பேட்டை காலனி- பேய்காநத்தம் இணைப்பு சாலையில் செங்கால் ஓடை குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி:- பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதங்கள் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்