மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-21 17:01 GMT
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இறந்த இளம்பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டில் வேலை
திண்டுக்கல் அருகே உள்ள ெரண்டலபாறை இந்திரா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் மிஸ்பா ஐசக் நியூட்டன் (வயது 31). இவர் சிங்கப்பூரில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஏ.வெள்ளோடு தெற்குத்தெருவை சேர்ந்த சிறுமணி மகள் மெசியா (25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 
திருமணம் முடிந்த 10 நாட்களிலேயே மிஸ்பா, சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு மெசியா சில நாட்கள் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். அப்போது கணவர் குடும்பத்தினர் மெசியாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கோபித்துக்கொண்டு ஏ.வெள்ளோட்டில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 
திடீர் சாவு
இந்தநிலையில் மிஸ்பா 3 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 19-ந்தேதி ஏ.வெள்ளோட்டுக்கு சென்று தனது மனைவியை வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது மெசியாவிடம் பெரியவர்கள் சமரசம் பேசி, ஒற்றுமையாக இருக்கும்படி அறிவுரை கூறி மிஸ்பாவுடன் அனுப்பி வைத்தனர். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மெசியாவை அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் செல்போனை எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டும், அவர் செல்போனை எடுக்காததால் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்கள், மிஸ்பாவின் வீட்டிற்கு சென்றனர். அப்போது மெசியா வீட்டில் மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மெசியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த மெசியாவின் உறவினர்கள், அவரது உடலை வாங்க மறுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மெசியாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமான நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா, உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மெசியா இறப்பு தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் மெசியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கணவர் கைது
இதற்கிடையே மெசியா மர்ம சாவு தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணவர் மிஸ்பா ஐசக் நியூட்டன், அவரது தாயார் ராஜகுமாரி, சகோதரன் கெர்சோல்ராஜா ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மெசியா எப்படி இறந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
மெசியாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. காசிசெல்வி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்