திருவாரூர்:_
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் புதுத்தெருவில் உள்ள நியூபாரத் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் 5 ஆயிரம் பேரை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். வங்கி கடன் திட்டங்கள், சுயவேலைவாய்ப்பு குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ., நர்சிங் படிப்புகள் வரை கல்வி தகுதி உடைய 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம். சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தை பதிவிறக்கம் செய்து முகாமிற்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.